வாழ்க்கையின் மொத்த சேமிப்பு 200,000 டொலர்களுடன் வந்த முதியவர்....நடுவீதியில் நேர்ந்த சோகம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக 200,000 டொலர்களை வங்கியில் இருந்து திரும்பப் பெற்ற ஒரு முதியவர் சில நிமிடங்களில் ஒரு திருடனிடம் அதனை பறிகொடுத்துள்ளார்

கலிபோர்னியாவில் குடியிருக்கும் பிரான்சிஸ்கோ கார்னெஜோ என்பவரே கடந்த 30 ஆம் திகதி தமது வாழ்க்கையின் மொத்த சேமிப்பையும் வெறும் 30 நொடிகளில் மொத்தமாக ஒரு கொடூர திருடனிடன் பறிகொடுத்தவர் ஆவார்.

கார்னெஜோ, சம்பவத்தன்று வங்கியில் இருந்து பணத்துடன் வெளியேறி தமது காருக்கு அருகே நடந்து செல்லவும், திடீரென்று கருப்பு ஹூடி அணிந்த ஒருவர், கார்னெஜோவை எட்டித்தள்ளி அவரிடம் இருந்த 200,000 டொலர் பணப்பையை பறித்துக் கொண்டு மாயமாகியுள்ளார்.

அந்த திருடன் நெட்டித்தள்ளியதில் குப்புறவிழுந்த கார்னெஜோவுக்கு தோள்பட்டை இடம்பெயர்ந்ததுடன், சிறாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் கார்னெஜோவுக்கு அந்த தொகை மிகவும் தேவையாக இருந்தது. தங்களின் வயதான உறவினரின் மருத்துவ செலவுகள் மற்றும் கல்வி கட்டணங்களுக்கும் தொகை செலுத்த வேண்டியிருந்தது.

வாழ்க்கையின் இதுவரையான மொத்த சேமிப்பும் தொலைந்த நிலையில், கர்னெஜோ குடும்பம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கார்னெஜோவின் மகள் சிண்டி புளோரஸ், இத்தகைய கொடூரமான தாக்குதலை எனது தந்தை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும்,

அவர் தன்னால் முடிந்த அளவுக்கு அந்த திருடனுடன் மல்லுக்கட்டினார் என்றே நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் இருந்து திருப்புவது தொடர்பில் கார்னெஜோ எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் இது எதிர்பாராத தாக்குதல், அல்லது வங்கியில் எவரேனும் கார்னெஜோவை கண்காணித்துள்ளனர் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பான நபர்களை கைது செய்ய ஏதேனும் தகவல் இருந்தால் பகிர்ந்துகொள்ள முன்வருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.