இன்று முடிவை அறிவிப்பார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான இறுதியான முடிவை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று காலை அறிவிக்கும் என்று கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பான முடிவை அறிவிக்கும், பொறுப்பை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது.

அவர் இன்று இந்த முடிவை அறிவிப்பார் என்றும் தயாசிறி ஜயசேகர கூறினார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்க அதிபர் சிறிசேன முடிவெடுத்திருந்தார். எனினும், அதற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் எழுந்திருந்தன.

இதனால் முடிவை அறிவிப்பதில் கடந்த சில நாட்களாக சுதந்திரக் கட்சி பிற்போட்டு வருகிறது.

இதனிடையே, கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவும் இன்று காலை 10 மணிக்கு நடக்கும் செய்தியாளர் சந்திப்பில் அதனை அதிபர் சிறிசேன அறிவிப்பார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

அதேவேளை இன்று அனுராதபுரவில் நடக்கும் கோத்தாபய ராஜபக்சவின் முதலாவது பரப்புரைப் பேரணியில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கக் கூடும் என்றும் அங்கு புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.