உக்ரைன் விமானத்தை தாக்கிய ஈரான் மீது நடவடிக்கை - 5 நாடுகள் தீர்மானம்!

உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்திய விவகாரம், தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இந் நிலையில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் இராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 176 பயணிகள் உயிரிழந்தனர்.

இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள்ளானதாக ஈரான் ஆரம்பித்தில் கூறியிருந்தாலும், அதன் பின்னர் தங்களது ஏவுகணையே விமானத்தை தாக்கியதாக ஈரான் ஒப்புக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து, ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

அத்துடன் அதற்காக உரிய தண்டனை வழங்க வேண்டுமெனவும் , உரிய விசாரணை நடத்த வேண்டுமென அமெரிக்காவும், கனடாவும் கோரியுள்ளன.

இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக, உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரைஸ்டய்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உக்ரேன் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது தொடர்பாக விசாரணை நடத்தவும், நஷ்டஈடு தொடர்பாகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் ஆலோசிக்க முடிவு செய்துள்ளதகவும் குறிப்பிட்டுள்ளார்.

போர் பதற்றம் காரணமாக தவறுதலாக விமானத்தை வீழ்த்திதாக ஈரான் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களை கொண்டு ஒரு குழு அமைக்கப்படுகிறதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழு எதிர்வரும் 16ஆம் திகதி லண்டனில் ஒன்று கூடி ஈரான் மீது சட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்த உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர், இதில் கனடா, சுவீடன், உக்ரேன், ஆப்கானிஸ்தான் உட்பட 5 நாடுகள் பங்கேற்கின்றதாகவும் கூறியுள்ளார்.