கொரொனாவால் திணறும் உலக நாடுகள்! அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஜெர்மனி

உலகம் முழுவதும் 2,43,162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 10,284 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் 41,035 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. அந்த நாட்டில்இதுவரை 3,405 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின்நாட்டில் 19,980 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,002 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் 10,995 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 372 பேர் இறந்துள்ளனர்.

வல்லரசு நாடான அமெரிக்காவில் 10,427 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 150 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் உயிரிழப்பை தடுப்பதிலும் அமெரிக்கா திணறி வருகிறது. பிரிட்டனில் 3,269 பேர்வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். அந்த நாட்டில் இதுவரை 144 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் 14,000 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஆயினும் உயிரிழப்பு எண்ணிக்கை அனைத்து நாடுகளையும் விட மிகவும் குறைவாக உள்ளது. இதுவரை 44 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 5-வதுஇடத்தில் உள்ளது. ஆனால் உயிரிழப்பு பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது. இதுகுறித்து ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:

பிரிட்டன் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருத்துவ கருவிகளுடன் 4,000 படுக்கைகள் மட்டுமே உள்ளன. பிரான்ஸில் 7,000 படுக்கைகள் உள்ளன. இத்தாலியில் 5,000 படுக்கைகள் உள்ளன. கரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகள் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 'ரேஷன்' அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதாவது உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு மட்டுமே தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதர நோயாளிகளுக்கு சாதாரண சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

அதேநேரம் ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் உயிர் காக்குடன் கருவிகளுடன் 25,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இதனால் கரோனா வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் அனைவருக்கும் ஜெர்மனி அரசால் சிகிச்சை அளிக்க முடிகிறது.

மேலும் ஜெர்மனியில் அரசு ஆய்வகங்கள் மட்டுமன்றி தனியார் ஆய்வகங்களும் கொரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் நாளொன்றுக்கு 12,000 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே ரத்தப் பரிசோதனை செய்யப்படுவதால் ஆரம்ப கட்டத்திலேயே நோயாளிகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு உடனடியாக தீவிர சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

இதனால் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவது தடுக்கப்படுகிறது. நோயாளிகளின் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமடைவோரின் சதவீதமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

சீனா, இத்தாலி, பிரான்ஸ் போன்று ஜெர்மனியில் இதுவரை எந்த நகரமும் சீல் வைக்கப்படவில்லை.இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஜெர்மனி மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

பயோன்டெக், குயிர்வாக் உள்ளிட்ட மருந்து நிறுவனங்கள் மருந்து ஆராய்ச்சியில் முக்கிய மைல் கல்லை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மனித குலத்தைக் காக்கும் வகையில் ஜெர்மனியில் விரைவில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

loading...