கதிகலங்கி நிற்கும் இத்தாலி! கொரோனா சூறையாடக் காரணம் என்ன?

இத்தாலியில் நேற்று மட்டும் 793 பேரை உயிரிழக்க வைத்திருக்கிறது கொரோனா. மேலும் 6,557 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக அந்த நாடு உறுதிப்படுத்தியுள்ளது. தீயைவிட வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த வைரஸ், முதலில் தோன்றியது சீனாவில்தான் என்றாலும், சீனாவின் புதிய நோய்பாதிப்புகள் எண்ணிக்கை தற்போது குறைந்து தான் உள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நோய்த்தொற்று சீனாவை விட அதிகமாகப் பரவிவருகிறது. சீனாவில் தோன்றிய நோய் ஐரோப்பாவை எப்படிச் சூறையாடியது? சீனாவுக்கும் இத்தாலிக்கும் என்ன தொடர்பு? காரணங்கள் என்னவாக இருக்கும்? என ஆராயலாம்.

இத்தாலியின் சமூக சுகாதாரத் திட்டம்தான் அவர்கள் இத்தனை மோசமான சூழலை எதிர்கொள்ளக் காரணம் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் சிலர். அவசரகாலங்களில் இலவச சிகிச்சை என்பது ஐரோப்பிய மருத்துவமனைகள் முழுவதும் இருக்கும் மருத்துவத் திட்டம். இது ஐரோப்பாவில் தங்கியிருக்கும் எந்த நாட்டுக் குடிமக்களுக்கும் பொருந்தும். இலவசமாகச் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள ஒரு சுகாதாரத்துறை உடைய நாட்டிலே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் ஐரோப்பாவின் சொகுசு நாடுகள். தமது ரிட்டையர்மென்ட் காலத்துக்காக பெரும்பாலான முதியவர்கள் தேர்ந்தெடுக்கும் நாடு என இத்தாலி ஆகும். உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் பல சொகுசு வாகனகங்களான லம்போர்கினி, ஃபெராரி, ஃபியட், குஸ்ஸி உள்ளிட்ட வாகனங்கள் இத்தாலியில்தான் உற்பத்தியாகின்றன. சீனா தான் லம்போர்கினி ரக கார்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு. இத்தாலியிடமிருந்து 2018-ல் மட்டும் 674.8 மில்லியன் டாலர் மதிப்பிலான கார்களை சீனா இறக்குமதி செய்தது. 13.9 பில்லியன் டாலர் மதிப்பிலான கார்களை ஜெர்மனியிடமிருந்து இறக்குமதி செய்தது. சீனாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத் தொடர்புக்கு மேலே குறிப்பிட்டவையே எடுத்துக்காட்டு.

இவை மட்டுமல்லாமல் சீனாவிடமிருந்து ஐரோப்பா தனது 97 சதவிகித உற்பத்திப்பொருள்களை இறக்குமதி செய்கிறது. உலகின் அதிக சனத்தொகை உடைய சீனாவின் 24 சதவிகித மாணவர்கள் வெளிநாடுகளில்தான் உயர்கல்வியைப் படிக்கிறார்கள். யுனெஸ்கோ சர்வேயின்படி சில வருடங்களுக்கு முன்பாக சீனாவிலிருந்து இத்தாலிக்கு 7,500-க்கும் மேலான மாணவர்கள் படிக்கிறார்கள். சீனாவிலிருந்து ஜெர்மனிக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000-த்தை எட்டும்.

மேலே குறிப்பிட்டனவற்றுக்கும் இத்தாலியில் பரவிவரும் வைரஸ்தொற்றுக்கும் என்ன தொடர்பு? சீனாவின் புதுவருடம் 25 ஜனவரி 2020 அன்று தொடங்கியது. அன்றைய தினம் உலகம் முழுவதும் இருக்கும் சீனர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள். அந்தச் சமயம் சீனாவில் மட்டுமே நோய்த்தொற்று இருந்ததால் மற்ற உலக நாடுகள் கொரோனா குறித்த பாதுகாப்பில் அக்கறை கொள்ளவில்லை. புதுவருடக் கொண்டாட்டத்துக்காகத் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பல சீனர்கள் எந்த ஏர்போர்ட்களிலும் பரிசோதனை செய்யப்படவில்லை. இத்தாலியில் கொரோனா பாதிப்பும் அதற்குப் பிறகுதான் உறுதிசெய்யப்பட்டது.

ஆயினும் அதிவேகமாக இத்தாலியில் கொரோனா பரவுவதற்குக் காரணம் அந்த நாட்டு மக்கள் அதிகம் சமூகம் சார்ந்து இயங்குபவர்கள். மாலை 4 மணிக்கு மேல் உணவு உண்பதற்கு முன்பு மக்கள் பொது இடங்களில் கூடி மது அருந்துவார்கள். இதற்கு அபெர்ரித்திவோ (Apreritivo) என்று பெயர். இது அவர்களது வழக்கம். நோய் பரவலுக்குப் பிறகும் கூட அவர்களது வழக்கத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. கொரோனா வேகமாகப் பரவியதற்கு இது முக்கிய காரணமாகும்.

வைரஸ்பரவலின் தொடக்கத்தில் இருந்த அலட்சியம் இன்று ஒரு சொகுசு நகரத்தையே சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கிறது. கட்டுக்கு அடங்காமல் போகும் மரணத்தைத் தடுக்க சீனாவிலிருந்து மருத்துவர்களைத் தற்போது வரவழைத்துள்ளது இத்தாலி. நோய் பாதித்தவர்களில் யாருக்குப் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிற அடிப்படையில் அவர்களுக்கான சிகிச்சையை அளிக்க அந்த நாட்டு மருத்துவர்கள் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் இத்தாலியில் 80 வயதுக்கு மேற்பட்ட கொரோனாநோய் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு சிகிச்சை தரப்படுவதில்லை என்கிற செய்தியும் பரவிவருகிறது. வெறும் கைகழுவுதல் மட்டுமே நோய் பரவலைத் தடுக்காது. சமூகத்திலிருந்து சுயவிலகல்தான் பரவல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் என்பதை இத்தாலியின் அச்சமூட்டும் இழப்பு எண்ணிக்கை நமக்கு உணர்த்துகிறது.

loading...