உலகை உலுக்கும் கொரோனா! இத்தாலியில் இறப்புக்கள் அதிகரிக்க யார் காரணம்? ஒரு நேரடி ரிப்போட்

இத்தாலி வாழ் தமிழர் மகேஷ். கடந்த 7 ஆண்டுகளாக இத்தாலியின் மிலன் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இத்தாலியின் தற்போதைய நிலை குறித்து ஒரு நீண்ட அனுபவக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.

கொரோனா தாக்குதலில் இத்தாலி நிலைகுலைந்து போனதன் பின்னணியை விவரித்திருக்கிறார். அங்கு நடந்தது, இங்கு நமக்கு எந்த வகையில் பாடங்களாக இருக்கும் என்பதை அறிவோம்...

'கொரோனா பரவத் தொடங்கியதும், 'மக்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்று அரசு வலியுறுத்தியும், முதல் இரண்டு மூன்று நாள்கள் மட்டும் சிறிது பதற்றத்தில் இருந்த இத்தாலியர்கள், பின் சகஜ நிலைக்குத் திரும்பினர். தமக்கு ஏதும் ஆகாது என்ற மெத்தனத்தில், மீண்டும் வெளியில் செல்லத் தொடங்கினர். அடுத்த சில தினங்களிலிலேயே உயிரிழப்பு அதிகரித்தது.

'* நம் நாட்டிலும், தமிழகத்திலும் இந்த மெத்தனப் போக்கை கண்டுகொள்ள முடிந்ததுதானே?! மக்கள் ஊரடங்கு முடிந்தவுடன் இயல்பாக மக்கள் வலம்வந்தது இங்கே கவனிக்கத்தக்கது.

'மக்கள் நலன் கருதி இத்தாலி அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த யோசித்தது. சீனா போன்று இரும்புக்கரம் கொண்டு மக்களை அடக்க முடியாத காரணத்தால், அரசாங்கம் விதிமுறைகளாக சிலவற்றை வலியுறுத்தியது. எதிர்ப்பார்த்தது போலவே மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. அதைக் கருத்தில் கொண்டு, வைரஸின் தாக்கம் பரவலாக இருந்த லம்பார்டி (Lombardy) என்ற ஒரு பகுதிக்கு மட்டும் மார்ச் 10-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க பரிசீலித்தது. முறையான அரசு அறிக்கை வெளிவருவதற்கு முன், பத்திரிகை வாயிலாக செய்தி கசியத் தொடங்கியது. இது, ஒருசில குழப்பங்களையும் பதற்றத்தையும் அதிகப்படுத்தியது என்பதே உண்மை. இது நடந்தது மார்ச் 8-ம் தேதி.

மக்கள் அன்று இரவே தொலைதூர ரயில் பயணத்திற்கு ஆயத்தமாகி, அந்தப் பகுதியை விட்டு கூட்டமாகப் புறப்பட்டனர். வேலை நிமித்தமாகப் பல இத்தாலியர்கள், தெற்கிலிருந்து வடக்கில் குடிபெயர்ந்து இங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் ஊருக்குக் கிளம்பினார்கள்.'

அதேபோலதான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, கூட்டம் கூட்டமாக மக்கள் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டது.

கொரோனா' வைரஸை ஒரு பகுதிக்குள் கட்டுப்படுத்தி வைக்க முயன்ற இத்தாலி அரசுக்கு, இதுபெரும் சவாலாக மாறியது. கண்மூடி கண் திறப்பதற்குள் மக்கள் இத்தாலியின் பல்வேறு மாகாணத்திற்கு பிரிந்து சென்றுவிட்டார்கள். இதைக் கருத்தில் கொண்டே உடனடியாக இத்தாலி அரசு, நாடு முழுவதும் ஊரடங்கைக் கொண்டுவந்தது.'

இந்தியாவில் நிலைமை கைமீறுவதற்குள் ஒட்டுமொத்தமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் அதிரடியாகச் செயல்பட்டிருப்பது இங்கே வரவேற்கத்தக்கது.

'மூன்றாவது வாரமும் எந்த முன்னேற்றமுமின்றி மக்கள் இறப்பு எண்ணிக்கை உயர்ந்தவாறே இருந்தது. இத்தாலிய அரசாங்கமும் பலவாறு மக்களை கேட்டுக்கொண்டபோதும், இத்தாலிய மக்கள் சிறிது அலட்சியமாக இருந்தனர் என்றே கூறலாம்.'

இறுதியாக, இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவையும் விஞ்சியது. இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்கக்கூட முடியா வண்ணம் அந்தக் கிராமமே ஸ்தம்பித்தது. அதன் பிறகுதான் இத்தாலி அரசு மிகவும் கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்தது.

அதாவது பொது இடங்களில் இருவருக்கு மேல் ஒன்றாக இருந்தால் உங்களுக்கு 5000 யூரோ வரை அபராதம் என்று அறிவித்தது. மிலன் போன்ற பெரு நகரங்களில் மிலிட்டரி கொண்டு குவித்தது. கடந்த சில தினங்களாக இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. வீதிகளில் மக்களின் எண்ணிக்கை பெருவாரியாகக் குறைந்துள்ளது. மக்கள் பலர் தங்களது வீட்டில் இருந்தபடியே பாட்டுப்பாடி, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நாம் இத்தாலி அளவுக்கு அலட்சியம் காட்டாமல், கொரோனா தாக்கம் தாண்டவமாடுவதற்குள் விழித்துக்கொண்டு, நம்மை நாமே தனிப்படுத்திக்கொண்டு, ஊரடங்கு உத்தரவை பொறுப்புடன் கடைபிடித்தால், இத்தாலி போல பேரழிவைச் சந்திக்க வேண்டியதில்லை.

'இன்றைக்கு உலகிலேயே பாதுகாப்பான ஒரு இடம் உண்டென்றால், அது இன்று நீங்கள் இருக்கும் இல்லமே.

'இது இத்தாலிக்கு மட்டுமல்ல... இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் ஏன் கொரொனா தன் கரங்கள் நீட்டியுள்ள அனைத்து நாடுக்ளுக்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.-