கொரோனாவிலிருந்து விடுபட்டாலும் காத்திருக்கும் ஆபத்து; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

கொரோனாவிலிருந்து விடுபட்டவர்கள் பத்தில் ஒருவர் வாசனை அல்லது சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழப்பதாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தற்போது, மான்செஸ்டர் அறிவியலாளர்கள் கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களுக்கு கேட்கும் திறனிலும் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றிலிருந்து கண்டறிந்துள்ளார்கள்.

அந்த ஆய்வில், வைதன்ஷாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயது வந்த 121 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

குறித்த நபர்கள் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட எட்டு வாரங்களுக்குப் பிறகு அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்களிடம், அவர்களது காது கேட்கும் திறனில் ஏதாவது மாற்றம் இருந்ததா என கேட்கும்போது, 13.2 சதவிகிதத்தினர் அவர்களது கேட்கும் திறன் மோசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களில் எட்டு பேருக்கு கேட்கும் திறன் குறைந்து வருவதோடு, மற்ற எட்டு பேருக்கு டின்னிடியூஸ் என்னும் பிரச்சினை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது, அவர்களுக்கு காதுகளுக்குள் ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள் .

இது தொடர்பில் ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் கெவின் முன்ரோ கூறும்போது,

மண்ணன், பொன்னுக்கு வீங்கி மற்றும் மூளை காய்ச்சல் ஆகிய தொற்றுக்களின்போது காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் என்பது ஏற்கனவே அறிந்த விஷயம்தான்.எனவே கொரோனாவிலும் அது சாத்தியம்தான் என்கிறார்.

அதே நேரத்தில் கொரோனாவுக்கு முன்பே நோயாளிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. அதோடு மன அழுத்தம், மாஸ்க் அணிவதால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் பிரச்சினை, கொரோனா சிகிச்சைக்காக கொடுக்கப்படும் மருந்துகளால் காதுகள் பாதிக்கப்படுதல் என பல்வேறு பிரச்சினைகள் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமையலாம்.

எனவே, கொரோனா, கேட்கும் திறனில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிவதற்காக, உடனடியாக மேற்கொண்டு இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்வது அவசியம் என அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள் .