கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறியும் ‘கே-9’ மோப்ப நாய்கள்!

உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் பொலிசாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

அனைத்து நாடுகளிலும் பொலிஸ் மற்றும் ராணுவத்தில் இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நாய்களின் படைகளை பொதுவாக ‘கே-9’அல்லது ‘கேனைன்’ என்று அழைக்கிறார்கள்.

அந்தவகையில் மற்ற நாடுகளை போல அமீரகத்திலும் போலீஸ் துறையில் ‘கே-9’ என்ற மோப்ப நாய் பிரிவு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

அமீரகத்தில் முதல் முறையாக கடந்த 1976-ம்ஆண்டு 6 நாய்கள் மற்றும் 6 பயிற்சியாளர்களுடன் இந்த மோப்ப நாய்கள் பிரிவு துபாய் போலீசில் சேர்க்கப்பட்டது. அதன் பின்னர் அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த ‘கே-9’ மோப்ப நாய் பிரிவு தொடங்கப்பட்டது.

அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் குற்ற புலனாய்வுத்துறையில் இந்த ‘கே-9’ மோப்ப நாய் பிரிவு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது ‘கே-9’ மோப்ப நாய் படை பிரிவில் ஜெர்மன் செப்பர்டு, மலினோய்ஸ் மற்றும் லாப்ரடார் வகை மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது.

உயர் வகை மோப்ப நாய்களுக்கு மூக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது ஆகும். இந்த நாய்களுக்கு மூக்கில் 25 கோடி உணரும் செல்கள் உள்ளது.

அத்துடன் இவை குறிப்பிட்ட வாசனையை நீண்ட நாட்கள் நினைவில் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது.

இந்த நிலைகளில் நாய்களை வைத்து கொரோனா தொற்றை கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு சோதனைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்காக பிரான்ஸ் நாட்டின் கால்நடை மையத்தின் ஒத்துழைப்பு பெறப்பட்டது.

இதில் கொரோனா தொற்று உள்ள பொருட்களை மோப்பம் பிடிக்க சிறப்பு உபகரணங்களை வைத்து பழக்கப்படுத்தப்படுகிறது. பிறகு அந்த வைரஸ் தொற்றுடையவர்களை எளிதில் தனது மோப்ப சக்தியால் அடையாளம் கண்டுபிடித்து விடுகிறது.

இந்த பரிசோதனைகள் அனைத்தும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைகளில் செய்துபார்க்கப்பட்டது.

தற்போது இந்த பயிற்சிகளின் மூலம் மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை மோப்பம் பிடித்து இந்த நாய்கள் கொரோனா தொற்றை துல்லியமாக உணர்ந்து விடுகின்றன.

இதற்காக வியர்வை அதிகம் வெளியேறும் அக்குள் பகுதியில் இருந்து மனித உடலின் வாசனை சேகரிக்கப்படுகிறது. அவைகளை தனித்தனியே மோப்ப நாய்களிடம் வைக்கும்போது கொரோனா தொற்று உள்ள நபரின் உடல் வாசனையை கண்டுபிடித்து விடுகிறது.

எனவே தற்போது அமீரக சுகாதார அமைச்சகம், சுங்கத்துறை, அபுதாபி, துபாய் சுகாதார ஆணையங்கள் ஒத்துழைப்பில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில், வணிக வளாகங்கள், பொது இடங்கள் மற்றும் விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறதாக அமீரக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.